To Get Free Islamic SMS Join

Thursday, January 13, 2011

உண்மைத் தோழர் அபூபக்ர் (ரலி) அவர்களின் உண்மை வரலாறு

முன்னுரை

நபி (ஸல்) அவர்களுக்கு அடுத்து வந்த ஆட்சித் தலைவரும் இஸ்லாத்திற்காக எண்ணில் அடங்காத தியாகங்களை செய்தவருமான அபூபக்ர் (ரலி) அவர்களின் வாழ்க்கையில் இச்சமுதாயத்திற்கு ஏராளமான படிப்பினைகள் படர்ந்து காணப்படுகின்றன. எனவே முதலாவதாக அவர்களுடைய வாழ்க்கையை ஆதாரப்பூர்வமான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தொகுத்துத் தந்துள்ளோம்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.

அறிமுகம்

ஆப்ரஹாம் என்ற மன்னன் யானைப் படைகளுடன் காஃபாவை இடிக்க வந்த போது அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட சின்னஞ்சிறு பறவைகள் அவனது படையின் மீது நெருப்பு மழையைப் பொழிந்ததால் தன் படையுடன் அவன் அழிக்கப்பட்டான். இந்த சம்பவம் நிகழ்ந்த வருடம் யானை வருடம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வு நடந்து இரண்டரை வருடம் கழித்து அபூகுஹாஃபா என்ற உஸ்மானுக்கும் சல்மா என்ற உம்முல் கைர் என்பவருக்கும் மகனாக அபூபகர் (ரலி) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள். அபூபக்ர் என்பது அவர்களின் புனைப் பெயராகும். இவர்களுக்கு பெற்றோர் வைத்த பெயர் அப்துல்லாஹ்.
நூல் : அல்இஸாபா பாகம் : 2 பக்கம் : 1088
நபி (ஸல்) அவர்கள் இறைச் செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் போது வேறு எவரும் உண்மைப்படுத்தாத அளவிற்கு நபி (ஸல்) அவர்களை அதிகம் உண்மைப்படுத்தியதால் சித்தீக் (அதிகம் உண்மைப்படுத்துபவர்) என்ற பெயரும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜெருசலத்தில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு (இரவில்) கொண்டு சொல்லப்பட்ட போது அதிகாலையில் இதைப் பற்றி மக்கள் (ஆச்சரியமாகப்) பேசிக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களை நம்பி உண்மைப்படுத்திய சிலர் (கொள்கையை விட்டும்) தடம் புரண்டார்கள். சில இணைவைப்பாளர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று இன்று இரவு பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக உமது தோழர் (முஹம்மது) கூறிக் கொண்டிருக்கிறாரே அதைப் பற்றி நீர் என்ன நினைகிறீர்? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் இவ்வாறு அவர் (முஹம்மத்) கூறினாரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ஆம் என்றவுடன் முஹம்மத் இதை சொல்லியிருந்தால் திட்டமாக அவர் உண்மை தான் சொன்னார் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இன்று இரவு பைத்துல் முகத்தஸிற்குச் சென்று பகல் வருவதற்கு முன்பே அவர் திரும்பினார் என்பதையா உண்மை என்று நீர் நினைக்கிறீர்? என்று இணை வைப்பாளர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் இதை விட பாரதூரமான விஷயங்களில் எல்லாம் அவரை உண்மையாளர் என்று நான் கருதிக் கொண்டிருக்கிறேன். வானத்திலிருந்து காலையிலும் மாலையிலும் (இறைச்) செய்தி (வருவதாக முஹம்மத் கூறுவதையும்) உண்மை என்று நான் நம்புகிறேன் என்று கூறினார். எனவே தான் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அஸ்ஸித்தீக் (அதிகம் உண்மைப்படுத்துபவர்) என்ற பெயர் இடப்பட்டது.
நூல் : ஹாகிம் பாகம் : 10 பக்கம் : 250
அனஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது :
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் உமர் உஸ்மான் ஆகியோரும் உஹுது மலையின் மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் உஹுதே அசையாமல் இரு. ஏனெனில் உன் மீது ஓர் இறைத் தூதரும் (நானும்) ஒரு சித்தீக்கும் இரு உயிர்த் தியாகிகளும் உள்ளனர் என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி (3675)
அபூபக்ர் (ரலி) அவர்கள் வயதில் மூத்தவராகவும் பல இடங்களுக்குச் சென்று வியாபாரம் செய்பவராகவும் இருந்தார்கள். எனவே மக்களுக்கு மத்தியில் அவர்கள் நன்கு அறிமுகமாகியிருந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்கள் பின் தொடர மதீனா நோக்கி (ஹிஜ்ரத்) சென்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் மூத்தவராகவும், அறிமுகமானவராகவும் இருந்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இளையவராகவும், அறிமுகமற்றவராகவும் இருந்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி (3911)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வருகை புரிந்தார்கள். அப்போது அவர்கள் தம் தோழர்களில் அபூபக்ர் (ரலி) அவர்கள் மட்டுமே கருப்பு வெள்ளை முடியுடையவர்களாக இருந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் அதிக வயதுடையவராகவும் இருந்தார்கள்.
நூல் : புகாரி (3919) (3920)
மாமனிதர் நபி (ஸல்) அவர்கள் தரும் சாட்சியத்தை விட நம்பத்தகுந்த சிறந்த சாட்சி வேறு எதுவும் இருக்க முடியாது. அபூபக்ர் (ரலி) அவர்கள் நல்ல மனிதர் என்று நபி (ஸல்) அவர்கள் நற்சான்றளித்தார்கள்.
அபுஹரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அபூபக்ர் சிறந்த மனிதராவார்.
நூல் : திர்மிதி (3728)

குடும்பம்

அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு நான்கு மனைவிமார்கள் இருந்தார்கள். அவர்கள்:
அப்துல் உஸ்ஸாவின் மகள் கதீலா
ஆமிருடைய மகள் உம்மு ரூமான்
உமைஸுடைய மகள் அஸ்மா
ஹாரிஜாவுடைய மகள் ஹபீபா
இவர்களில் கதீலாவைத் தவிர்த்து ஏனைய மூவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். கதீலா இஸ்லாத்தை ஏற்றாரா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
இந்நால்வரின் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளும் மொத்தம் ஆறு குழந்தைகள் பிறந்தன. அவர்கள் அப்துல்லாஹ், அப்துர்ரஹ்மான், முஹம்மத், ஆயிஷா, அஸ்மா, உம்மு குல்சூம் ஆகியோராவர். இவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
அல்காமில் ஃபித்தாரீஹ் பாகம் : 1 பக்கம் : 396
வம்சாவழித் தொடரில் சங்கிலித் தொடராக நான்கு பேர் நபி (ஸல்) அவர்களின் தோழர்களாக திகழும் சிறப்பு அபூபக்ர் (ரலி) அவர்களின் குடும்பத்திற்குத் தவிர வேறுயாருக்கும் கிடைக்கவில்லை. ஏனென்றால் அபூ குஹாஃபா (ரலி) அவர்களும் அவரது மகன் அபூபக்ர் (ரலி) அவர்களும் அவரது மகள் அஸ்மா (ரலி) அவர்களும் அவரது மகன் அப்துல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்றவர்கள்.

சமுதாய அந்தஸ்து

அபூபக்ர் (ரலி) அவர்களின் அழகிய நல்த்தை, சிறந்த அனுபவம், அப்பழுக்கற்ற வாழ்க்கை ஆகிய அம்சங்கள் அன்றைய அரபுகளிடத்தில் அவர்கள் தலைசிறந்தவராகக் கருதப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. இஸ்லாம் வளர்ந்த ஆரம்பக் காலகட்டத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டார்கள். ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் சமுதாயத்தில் மதிப்பு மிக்க தலைவராக இருந்ததால் அவர்களைத் தாக்குவதற்கு யாரும் துணியவில்லை.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுவதாவது
முதன் முதலில் இஸ்லாத்தை ஏழு பேர் பகிரங்கப்படுத்தினார்கள். அந்த ஏழு பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அம்மார் (ரலி) அவர்களும் அம்மாரின் தாயார் சுமையா (ரலி) அவர்களும் சுஹைப் (ரலி) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் மிக்தாத் (ரலி) அவர்களும் ஆவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சிறிய தந்தை அபூதாலிபின் மூலம் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் பாதுகாத்துக் கொண்டான். அபூபக்ர் (ரலி) அவர்களை அவர்களது சமூகத்தாரின் மூலம் அல்லாஹ் பாதுகாத்தான். ஆனால் மற்றவர்களை இணை வைப்பாளர்கள் பிடித்து அவர்களுக்கு இரும்புச் சட்டைகளை அணிவித்து வெயிலில் கருக்கினார்கள்.
நூல் : இப்னு மாஜா (147)
இஸ்லாத்தை ஏற்றவர்களை கொலைவெறியுடன் பார்த்த இணை வைப்பாளர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஊரை விட்டு வெளியேறுவதைக் கண்டு அவர்களுக்கு மாத்திரம் இஸ்லாத்தைப் பகிரங்கப்படுத்தாமல் வீட்டில் கடைப்பிடிப்பதற்கு அனுமதியளித்தார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
முஸ்லிம்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்ட போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தாயகம் துறந்து அபிசீனியாவை நோக்கிச் சென்றார்கள். பர்குல் ஃகிமாத் எனும் இடத்தை அடைந்த போது அப்பகுதியின் தலைவர் இப்னு தகினா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அவர்களிடம் எங்கே செல்கிறீர்? என்று கேட்டார். அபூபக்ர் (ரலி) அவர்கள் என் சமுதாயத்தினர் என்னை வெளியேற்றி விட்டனர். எனவே பூமியில் பயணம் சென்று என் இறைவனை வவ்ங்கப் போகிறேன் என்று கூறினார்கள். அதற்கு இப்னு தகினா அவர்கள் உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது. வெளியேற்றப்படவும் கூடாது. ஏனெனில் நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர். உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர். பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர். விருந்தினர்களை உபசரிக்கிறீர். துன்பமுற்றவர்களுக்கு உதவுகிறீர். எனவே நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன். ஆகவே திரும்பி உமது ஊருக்குச் சென்று உமது இறைவனை வணங்குவீராக என்று கூறினார். இப்னு தகினா தம்முடன் அபூபக்ர் (ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு குரைஷிக் காஃபிர்களின் பிரமுகர்களைச் சந்தித்தார். அவர்களிடம் அபூபக்ரைப் போன்றவர்கள் வெளியேறவும் கூடாது. வெளியேற்றப்படவும் கூடாது. ஏழைகளுக்காக உழைக்கின்ற உறவினர்களுடன் இணங்கி வாழ்கின்ற விருந்தினரை உபசரிக்கின்ற பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கின்ற துன்பப்படுபவர்களுக்கு உதவுகின்ற ஒரு மனிதரை நீங்கள் வெளியேற்றலாமா? என்று கேட்டார். ஆகவே குரைஷியர் இப்னு தகினாவின் அடைக்கலத்தை ஏற்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர். மேலும் இப்னு தகினாவிடம் தம் வீட்டில் இறைவனைத் தொழுதுவருமாறும் விரும்பியதை ஓதுமாறும் அதனால் தங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறும் அதை பகிரங்கமாக செய்யாதிருக்கும் படியும் அபூக்ருக்கு நீர் கூறுவீராக. ஏனெனில் அவர் எங்கள் மனைவி மக்களைக் குழப்பிவிடுவார் என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்றனர்.
நூல் : புகாரி (2297)

ஆரம்பக் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்

சமுதாய அந்தஸ்தும், மக்கள் செல்வாக்கும், வசதி வாய்ப்பும் பெற்றவர்கள் பெரும்பாலும் எளிதில் சத்தியத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மக்காவில் இஸ்லாம் பரவிய காலத்தில் நபியவர்களை ஏற்றுக் கொண்டவர்களில் அதிகமானோர் சாமானியர்கள் தான். ஆனால் இதற்கு விதிவிலக்காக பேர் புகழ் செல்வம் ஆகிய அனைத்தையும் உதறிவிட்டு சத்தியத்தின் பால் ஆஜ்ம்ப காலகட்டத்தில் விரைந்து வந்தவர்களில் அபூபக்ர் (ரலி) அவர்கள் முதன்மையானவர்கள்.
எதிர்ப்புகள் இருந்தால் ஒரு மாதிரியும் ஆதரவுகள் இருந்தால் இன்னொரு மாதிரியும் நடந்து கொள்பவர்கள் சமுதாயத்தில் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அவசியம் பாடம் பெற வேண்டும்.
அபுத் தர்தா (ரலி) அவர்கள் கூறுவதாவது
நபி (ஸல்) அவர்கள் (மக்களே) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். பொய் சொல்கிறீர் என்று நீங்கள் கூறினீர்கள். அபூபக்ர் (ரலி) அவர்களோ நீங்கள் உண்மையே சொன்னீர்கள் என்று சொன்னார். மேலும் தம்னையும் தம் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார் என்று கூறினார்கள்.
புகாரி (3661)
அம்ர் பின் அபசா (ரலி) அவர்கள் கூறுவதாவது
நான் அறியாமைக் காலத்தில் வாழ்ந்த போது மக்கள் அனைவரும் வழிகேட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கென (வாழ்க்கை நெறி) எதுவும் கிடையாது. அவர்கள் சிலைகளை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் என எண்ணி (வருந்தி)னேன். இந்நிலையில் மக்காவில் ஒரு மனிதர் (புதிய) செய்திகளைச் சொல்லி வருவதாக கேள்விப்பட்டேன். எனவே நான் என் வாகனத்தில் அமர்ந்து அவரை நோக்கிச் சென்றேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைமறைவாக இருந்து கொண்டிருந்தார்கள். எனவே நான் அரவமின்றி மெதுவாக மக்காவிற்குள் நுழைந்து அவர்களிடம் சென்றேன். அவர்களிடம் நான் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் யார் உங்களுடன் இருக்கிறார்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஒரு சுதந்திரவானும் ஒரு அடிமையும் உள்ளனர் என்றார்கள். (அன்றைய நாளில் அபூபக்ர் (ரலி) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் நபியவர்களை ஏற்று அவர்களுடன் இருந்தார்கள்.
நூல் : முஸ்லிம் (1512)
அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் கூறியதாவது
(இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஐந்து அடிமைகளும், இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண்களில்) அபூபக்ர் (ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண்டேன்.
நூல் : புகாரி (3660)
செல்வத்தையும், சமுதாய மரியாதையையும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு வாரிக்கொடுத்த இறைவன் எவரிடத்திலும் இல்லாத அளவிற்கு ஈமானிய உறுதியையும் நிறைவாகக் கொடுத்திருந்தான். எனவே தான் இக்கட்டான அந்நேரத்தில் இஸ்லாத்தை ஏற்றதற்காகக் கடுமையாக தண்டிக்கப்பட்ட பிலால் (ரலி) அவர்களை அடிமைத் தலையிலிருந்து விடுவித்து அவர்களும் இஸ்லாத்தைச் சுதந்திரமாக கடைபிடிக்கும் நிலையை அபூபக்ர் (ரலி) அவர்கள் உருவாக்கினார்கள்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது
உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் எங்கள் தலைவராவார். எங்கள் தலைவர் பிலாலை (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தார்கள் என்று சொல்வார்கள்.
நூல் : புகாரி (3754)

மக்களில் மிக அறிந்தவர்

அபூபக்ர் (ரலி) அவர்கள் குரைஷி கோத்திரத்தாரின் வம்சாவழித் தொடரைப் பற்றி மக்களில் மிக அறிந்தவராக இருந்தார்கள். ஒட்டு மொத்த குரைஷிகளின் வம்சாவழியைத் தெரிந்து வைத்திருக்க வேண்டுமானால் விசாலமான அறிவும் சிறந்த மனன சக்தியும் தேவைப்படும். இந்த ஆற்றலை அபூபக்ர் (ரலி) அவர்கள் பெற்றிருந்தார்கள்.
(குரைஷியர்களுக்கெதிராக வசைகவி பாடுவதற்காக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்களிடம் ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் வந்த போது தங்களைச் சத்தியத்துடன் அனுப்பியவன் மீதாணையாக தோலைக் கிழிப்பதைப் போன்று நான் எனது நாவால் அவர்களைக் கிழித்தெறிவேன் என்று ஹஸ்ஸான் கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரப்படாதீர். அபூபக்ர் குரைஷிகளின் வமிசாவளி குறித்து நன்கறிந்தவர். குரைஷியரோடு எனது வமிசமும் இணைந்துள்ளது. அபூபக்ர் உம்மிடம் எனது வமிசாவளியைத் தனியாப் பிரித்தறிவிப்பார் என்று கூறினார்கள். ஆகவே ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்றுவிட்டு திரும்பி வந்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (4903)
நபி (ஸல்) அவர்கள் மறைமுகமாகச் சுட்டிக் காட்டிய விஷயங்களை எளிதில் புரிந்து கொள்ளும் அளவிற்கு சமயோசித அறிவை அபூபக்ர் (ரலி) அவர்கள் பெற்றிருந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சொற்பொழிவில் தன்னிடம் உள்ளவை வேண்டுமா? இவ்வுலகம் வேண்டுமா? எனத் தேர்ந்தெடுக்க ஒரு அடியாருக்கு அல்லாஹ் சுதந்திரம் அளித்தான். அந்த அடியார் அல்லாஹ்விடம் உள்ளதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார் என்றார்கள். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த) அபூபக்ர் (ரலி) அழ ஆரம்பித்து விட்டார்கள். இந்த முதியவர் ஏன் அழுகிறார்? தன்னிடம் உள்ளவை வேண்டுமா? இவ்வுலகம் வேண்டுமா? எனத் தேர்ந்தெடுக்க ஒரு அடியாருக்கு அல்லாஹ் சுதந்திரம் அளித்த போது அந்த அடியார் அல்லாஹ்விடம் உள்ளதையே தேர்ந்தெடுத்துக் கொண்டால் அதற்காக அழ வேண்டுமா என்ன? என்று நான் மனதிற்குள் கூறிக் கொண்டேன். அந்த அடியார் நபி (ஸல்) அவர்கள் தாம். (தமது மரணத்தையே அவ்வாறு குறிப்பிட்டார்கள் என்பதைப் பிறகு நான் அறிந்து கொண்டேன்). அபூபக்ர் (ரலி) எங்களை விட அறிவில் சிறந்தவராக இருந்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : புகாரி (466)
மக்கத்து இணை வைப்பாளர்களிடமிருந்து தப்பித்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் பயணம் செய்த போது தனது சீறிய அறிவைப் பயன்படுத்தி நபி (ஸல்) அவர்களை மிகவும் பாதுகாப்பாகக் கொண்டு சென்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்கள் பின் தொடர மதீனா நோக்கி (ஹிஜ்ரத்) சென்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் மூத்தவராகவும் அறிமுகமானவராகவும் இருந்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இளையவராகவும் அறிமுகமற்றவராகவும் இருந்தார்கள். (அவர்கள் இருவரும் ஹிஜ்ரத் சென்ற பயணத்தின் போது) அபூபக்ர் (ரலி) அவர்களை ஒரு மனிதர் சந்தித்து அபூபக்ரே உமக்கு முன்னால் உள்ள இந்த மனிதர் யார்? என்று கேட்கிறார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் இந்த மனிதர் எனக்கு வழிகாட்டுபவர் என்று (நபி (ஸல்) அவர்களை எதிரிக்கு காட்டிக் கொடுத்து விடாமலும் அதே சமயம் உண்மைக்குப் புறம்பில்லாமலும் இரு பொருள் படும்படி) பதிலளித்தார்கள். இதற்கு (பயணத்தில்) பாதை (காட்டுபவர்) என்றே அபூபக்ர் பொருள் கொள்கிறார் என எண்ணுபவர் எண்ணிக் கொள்வார். ஆனால் நன்மார்க்கத்திற்கு (வழிகாட்டுபவர்) என்ற பொருளையே அபூபக்ர் கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி (3911)

நிறைவான மார்க்க அறிவு

பொதுவாக வயதானவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட மாட்டார்கள். ஆர்வம் இருந்தாலும் வயது முதிர்வின் காரணத்தினால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளவும், மனனம் செய்யவும் முடியாது. ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் பொது விஷயங்களை அறிந்ததுடன் மாôக்க அறிவையும் நிறையப் பெற்றிருந்தார்கள். எனவே தான் மக்கா வெற்றிக்குப் பிறகு முதன் முதலில் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்ட கூட்டத்திற்கு இவர்களை நபி (ஸல்) அவர்கள் தலைவராக நியமித்தார்கள்.
ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முன்பு அபூபக்ர் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைவராக்கி அனுப்பிய ஹஜ்ஜின் போது அபூபக்ர் (ரலி) அவர்கள் இந்த ஆண்டிற்குப் பிறகு இணை வைப்பவர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது என்றும் நிர்வாணமாக எவரும் இறையில்லத்தைச் சுற்றி வரக் கூடாது என்றும் மக்களிடையே பொது அறிவிப்புச் செய்யும் ஒரு குழுவினருடன் என்னையும் (ஓர் அறிவிப்பாளராக) அனுப்பி வைத்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (4657)
நபி (ஸல்) அவர்களுடன் நீண்ட தோழமையைப் அபூபக்ர் (ரலி) அவர்கள் பெற்றிருந்தமையால் மற்றவர்களுக்குத் தெரியாத பல ஹதீஸ்களை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள்.
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறுவதாவது
நபி (ஸல்) அவர்கள் இறந்த போது அவர்களின் தோழர்கள் (நபியவர்களின் மரணத்தில்) சந்தேகப்பட முனையும் அளவிற்கு கவலையுற்றார்கள். நானும் அவர்களில் ஒருவன். உயரமான ஒரு கட்டடத்தின் நிழலில் நான் அமர்ந்திருந்த போது உமர் (ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் எனக்கு சலாம் கூறினார்கள். ஆனால் அவர்கள் என்னைக் கடந்து சென்றதையோ எனக்கு சலாம் கூறியதையோ நான் உணரவில்லை. உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று நான் உஸ்மானைக் கடந்து சென்ற போது சலாம் கூறினேன். ஆனால் அவர் எனக்கு பதிலுறைக்கவில்லை. இது உங்களுக்கு ஆச்சரியமாய் இல்லையா? என்று கேட்டார்கள். பின்பு அவரும் அபூபக்ர் (ரலி) அவர்களும் என்னிடத்தில் வந்து சலாம் கூறிவிட்டு எனது சகோதரர் உமர் உம்மிடம் வந்து உமக்கு சலாம் கூறியதாகச் சொல்கிறார். ஆனால் நீங்கள் அவருக்கு பதிலுறைக்கவில்லையாம். ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் அவ்வாறு செய்யவில்லை என்று கூறினேன். உமர் (ரலி) அவர்கள் இல்லை அல்லாஹ்வின் மீதாணையாக நீங்கள் அப்படித் தான் செய்தீர்கள், பனூ உமய்யா கோத்திரத்தாரே உங்களின் குலப் பெருமை தான் (இவ்வாறு உங்களை செய்ய வைத்தது) என்று கூறினார்கள். நான் அல்லாஹ்வின் மீதாணையாக நீங்கள் என்னைக் கடந்து சென்றதையும் எனக்கு சலாம் கூறியதையும் நான் உணரவில்லை என்று கூறினேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் (குறிக்கிட்டு) உஸ்மான் உண்மை சொல்கிறார். ஏதோ ஒரு விஷயம் உம் கவனத்தை மாற்றி விட்டது என்று கூறினார்கள். அதற்கு நான் ஆம் என்று கூறினேன். அது வென்ன? என்று அபூபக்ர் கேட்டார். நாம் வெற்றி பெறுவதற்கான வழியைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்பதற்கு முன்பே அல்லாஹ் தனது நபியை கைப்பற்றிக் கொண்டான் என்று நான் கூறினேன். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் இதைப் பற்றி நான் அவர்களிடத்தில் (முன்பே) கேட்டு விட்டேன் என்று கூறினார். எனது தாயும் தந்தையும் தங்களுக்கு அற்பணமாகட்டும். நீங்கள் தான் அந்த வெற்றிக்குத் தகுதி வாய்ந்தவர்கள் என்று நான் கூறினேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வின் தூதரே நாம் எப்படி வெற்றி பெற முடியும்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நான் எந்த வார்த்தையை எனது சிறிய தந்தையிடம் எடுத்துக் கூறி அவர் நிராகரித்தாரோ அந்த வார்த்தையை எவர் என்னிடமிருந்து ஏற்றுக் கொள்கிறாரோ அவருக்கு அந்த வார்த்தை வெற்றியாக இருக்கும் என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மத் (20)
உஸ்மான் (ரலி) அவர்கள் சலாமிற்குப் பதில் கூறவில்லை என்ற குற்றச்சாட்டை உமர் (ரலி) அவர்கள் கொண்டு வந்த போது அதை உதாசீனப்படுத்தி விடாமல் உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்று அபூபக்ர் (ரலி) அவர்கள் நியாயம் கேட்கிறார்கள். தவறு நடந்தால் அதை தட்டிக் கேட்கும் அபூபக்ர் (ரலி) அவர்களின் வீர உணர்வை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
குலப் பெருமையினால் தான் உஸ்மான் சலாம் கூறவில்லை என்று உமர் (ரலி) அவர்கள் குற்றம்சாட்டும் போது உஸ்மான் (ரலி) அவர்களின் மீது நல்லெண்ணம் வைத்து இருவருக்கும் மத்தியில் அபூபக்ர் (ரலி) அவர்கள் இணக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். சிறிய சிறிய விஷயங்களையெல்லாம் பெரிதாக்கி இருவருக்கிடையே சண்டையை மூட்டுபவர்கள் இந்த நிகழ்விலிருந்து பாடம்பெற கடமைப்பட்டிருக்கிறார்கள்.
குர்ஆன் வசனத்தை மக்கள் தவறான முறையில் விளங்கி விடாமல் இருப்பதற்காக நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களைச் சுட்டிக்காட்டி மக்கள் செய்ய வேண்டிய கடமையை உணர்த்தும் சீறிய சிந்தனை கொண்டவராகவும் அபூபக்ர் (ரலி) அவர்கள் திகழ்ந்துள்ளார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறுவதாவது
மக்களே நீங்கள் இந்த வசனத்தை ஓதுகிறீர்கள். நம்பிக்கை கொண்டோரே! உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர் வழி நடக்கும் போது வழி கெட்டவனால் உங்களுக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீங்கள் அனைவரும் மீள்வது அல்லாஹ்விடமே. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு (அப்போது) அறிவிப்பான். (5 : 105) (இதைப் படிக்கும் போது நாம் நல்லவர்களாக வாழ்ந்தாலே போதுமானது என்று நீங்கள் நினைக்கலாம்) ஆனால் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். மக்கள் அநியாயக்காரனைக் காணும் போது அவனது கைகளை அவர்கள் பிடிக்கா விட்டால் (அதாவது தீமையைத் தடுக்கா விட்டால்) அவர்கள் அனைவருக்கும் தனது தண்டனையை அல்லாஹ் பொதுவாக்கி விடும் நிலை விரைவில் ஏற்பட்டுவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : திர்மிதி (2094)
இன்றைக்கு நல்லதை மட்டும் கூறிக்கொண்டு சமுதாயத்தில் நிலவும் தீமைகளைக் கண்டுகொள்ளாமல் நழுவிச் செல்பவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறிய இந்த ஹதீஸை ஞாபகத்தில் வைக்க வேண்டும். இவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை உண்மையில் நேசிக்கக்கூடியவராக இருந்தால் அவர்கள் கூறிய இந்த உபதேசத்தை ஏற்றுச் செயல்பட வேண்டும்.

ஒழுக்கத்தைக் கற்பிக்கும் தந்தை

தமது பிள்ளை தவறு செய்தால் பாசத்தைக் காரணம் காட்டி கண்டிக்காமல் பலர் விட்டு விடுகிறார்கள். நாளடைவில் பிள்ளைகள் பெரும் பெரும் தவறுகளைச் செய்வதற்கு பெற்றோர்களின் இந்த அல்ட்சியப்போக்கு காரணமாகி விடுகிறது. அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்கள் சில சிறிய சிறிய தவறுகளை செய்யும் போது அதைக் கண்டிக்கும் அக்கரையுள்ள பொறுப்புள்ள தந்தையாக அபூபக்ர் நடந்து கொண்டார்கள். தன்னாலும் தன் பிள்ளையாலும் யாருக்கும் இடஞ்சல் வந்து விடக் கூடாது என்று கருதினார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
நாங்கள் ஒரு பிரயாணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். பைதாவு அல்லது தாதுல் ஜைஷ் என்னும் இடத்தை வந்தடைந்த போது எனது கழுத்தணி அறுந்து (தொலைந்து) விட்டது. அதைத் தேடுவதற்காக நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கி விட்டோம். நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை. அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சிலர் வந்து (உங்கள் மகளான) ஆயிஷா செய்ததைப் நீங்கள் பார்த்தீர்களா? நபி (ஸல்) அவர்களையும் மக்களையும் இங்கே தங்கச் செய்து விட்டார்கள். அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை. அவர்களுடனும் தண்ணீர் எடுத்து வரவில்லை என்று முறையிட்டனர். அபூபக்ர் (ரலி) (என்னருகே) வந்த போது நபி (ஸல்) அவர்கள் தம் தலையை என் மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களையும் மக்களையும் தங்க வைத்து விட்டாயே? அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை. அவர்களுடனும் தண்ணீர் இல்லை எனக் (கடிந்து) கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு தனது கையால் என் இடுப்பில் குத்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் தலை என் மடி மீது இருந்த காரணத்தினால் தான் நான் அசையாது இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் காலையில் விழித்தெழுந்த போதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ் தயம்மமுடைய வசனத்தை இறக்கினான். எல்லோரும் தயம்மும் செய்து கொண்டனர்.
நூல் : புகாரி (334)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது
ஆயிஷா (ரலி)யும் ஸைனப் (ரலி)யும் வாக்குவாதம் செய்தனர். தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டும் கூட அவர்கள் சப்தமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்விருவரின் சப்தத்தைக் கேட்டு (கோபமுற்று நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே அவர்களின் வாயில் மண்ணைத் தூவிவிட்டு நீங்கள் தொழச் செல்லுங்கள் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் (தொழச்) சென்று விட்டார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் இப்போது நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் (என் தந்தை) அபூபக்ர் வருவார். என்னைக் கடுமையாகக் கண்டிப்பார்கள் என்று கூறினார்கள். (அதைப் போன்றே) நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் அபூபக்ர் (ரலி) ஆயிஷா (ரலி) யிடம் வந்து கடுஞ் சொற்களால் அவரைக் கண்டித்தார்கள். மேலும் இப்படியா நீ நடந்து கொள்கிறாய்? என்று கேட்டார்கள்.
நூல் : முஸ்லிம் (2898)
நண்பர்களாக நெருங்கி பழகினாலும் ஒருவருக்கொருவர் சம்பந்தம் செய்து கொள்ளும் போது குடும்பப் பிரச்சனை ஏற்பட்டு நட்பில் விரிசல் ஏற்படுகிறது. தம் மகள் என்பதால் அவளுக்கு ஆதரவாகப் பேசத்தான் எல்லாப் பெற்றோர்களும் முயற்சிப்பார்கள். ஆனால் தனது மகள் ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் மருமகனார் நபி (ஸல்) அவர்களுக்கும் மத்தியில் ஒரு பிரச்சனை ஏற்படும் போது நபி (ஸல்) அவர்களின் உண்மை நிலையை அறிந்து தம் மகளை அபூபக்ர் (ரலி) அவர்கள் கண்டித்தார்கள்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறியதாவது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றி தம் துணைவியர்கள் இருக்க பேச முடியாத அளவிற்குத் துக்கம் மேலிட்டவர்களாக மௌனமாக அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சிரிக்க வைக்க நான் எதையேனும் சொல்லப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு அல்லாஹ்வின் தூதரே என் மனைவி (ஹபீபா) பின்த் காரிஜா என்னிடத்தில் குடும்பச் செலவுத் தொகையை (உயர்த்தித் தருமாறு) கேட்க நான் அவரை நோக்கி எழுந்து அவரின் கழுத்தில் அடித்து விட்டேன் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். இதோ நீங்கள் காண்கிறீர்களே இவர்களும் என்னிடம் செலவுத் தொகையை (உயர்த்தித் தருமாறு) கோரியே என்னைச் சுற்றிக் குழுமியுள்ளனர் என்று கூறினார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி அவர்கள் கழுத்தில் அடிக்க எழுந்தார்கள். அடுத்து உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வி) ஹஃப்ஸாவை நோக்கி அவர்களது கழுத்தில் அடிப்பதற்காக எழுந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இல்லாததை நீங்கள் கேட்கிறீர்களா? என்று அவ்விருவருமே கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியர் அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இல்லாத எதையும் ஒரு போதும் நாங்கள் கேட்க மாட்டோம் என்று கூறினர்.
நூல் : முஸ்லிம் (2946)
நுஃமான் பின் பஷீர் (ரலி) கூறுவதாவது
அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வருவதற்கு) அனுமதி வேண்டினார்கள். அவர்கள் (வீட்டிற்குள்) நுழைந்த போது ஆயிஷா (ரலி) அவர்களின் உரத்த சப்தத்தைச் செவுயுற்றார்கள். அல்லாஹ் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் சப்தத்தை உயர்த்துபவளாக உன்னை நான் காண்கிறேன் என்று கூறி ஆயிஷாவை அடிப்பதற்காக அவர்களை அபூபக்ர் பிடிக்கலானார். நபி (ஸல்) அவர்கள் அபூபக்கரை (அடிக்க விடாமல்) தடுத்து நிறுத்தினார்கள். அபூபக்ர் கோபமுற்றவராக வெளியே சென்றார். அபூபக்ர் வெளியே சென்ற பிறகு நான் அந்த மனிதரிடமிருந்து எப்படி உன்னைக் காப்பாற்றினேன் என்பதை நீ கவனித்தாயா? என்று நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா (ரலி)யிடம்) கூறினார்கள். அபூபக்ர் பல நாட்கள் (ஆயிஷாவின் வீட்டிற்கு வராமல்) இருந்தார்கள். பின்பு (ஒரு முறை) அனுமதி கேட்டு (வீட்டிற்கு வந்த போது) நபி (ஸல்) அவர்களையும் ஆயிஷா (ரலி) அவர்களையும் இணக்கமாகிக் கொண்டவர்களாகக் காணும் போது உங்களுடைய சண்டையில் என்னைக் கலந்து கொள்ளச் செய்தது போல் உங்கள் இணக்கத்திலும் என்னை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் சேர்த்துக் கொண்டோம். சேர்த்துக் கொண்டோம் என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் (4347)

நற்காரியங்களை அதிகமாக செய்தவர்

ஏகத்துவக் கொள்கையை ஏற்றதை மாத்திரம் தாங்கள் செய்த பெரும் நன்மையாகக் கருதிக் கொண்டு இன்ன பிற நன்மையானக் காரியங்களில் ஆர்வம் காட்டாதவர்களை அதிகமாக சமுதாயத்தில் காணுகிறோம். இஸ்லாம் கற்றுத் தந்த அனைத்து விதமான நற்காரியங்களும் அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் நிரம்பியிருந்தது.
அபூஹ‚ரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது
ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து அல்லாஹ்வின் அடியாரே இது (பெரும்) நன்மையாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்) என்று அழைக்கப்படுவார். (தமது உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர். அறப்போர் புரிந்தவர்கள் ஜிஹாத் என்னும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். நோன்பாளியாக இருந்தவர்கள் ரய்யான் என்னும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். தர்மம் செய்தவர் சதகா என்னும் வாசல் வழியாக அழைக்கப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே என் தாயும் தந்தையும் தங்களுக்கு அற்பணமாகட்டும். இந்த வாசல்கள் அனைத்திலிருந்து அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துன்பமும் இல்லையே எனவே அனைத்து வாசல்கள் வழியாகவும் ஒருவர் அழைக்கப்படுவாரா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம். நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்கள்.
புகாரி (1897)
அபூ கதாதா (ரலி) அவர்கள் கூறுவதாவது
நபி (ஸல்) அவர்கள் ஒரு இரவில் வெளியில் வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் சப்தத்தை தாழ்த்தி தொழுது கொண்டிருப்பதைக் கண்டார்கள். உமர் (ரலி) அவர்கள் தம் சப்தத்தை உயர்த்தி தொழுதுகொண்டிருந்த நிலையில் அவர்களை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களிடம் சேர்ந்து இருந்த போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரே உனது சப்தத்தை தாழ்த்தியவராக நீர் தொழுதுகொண்டிருந்த போது நான் உங்களைக் கடந்து சென்றேன் என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு அருகில் இருப்பவர்களுக்கு (என் ஓதுதலை) நான் கேட்கச் செய்து விட்டேன் அல்லாஹ்வின் தூதரே என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடத்தில் நீர் சப்தத்தை உயர்த்திய நிலையில் தொழுது கொண்டிருக்கும் போது உங்களை நான் கடந்து சென்றேன் என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே நான் உறங்குபவர்களை விழிக்கச் செய்கிறேன். ஷைத்தான்களை விரட்டுகிறேன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் (அபூபக்ரிடம்) அபூக்ரே உமது சப்தத்தை கொஞ்சம் உயர்த்துங்கள் என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்களிடம் உமரே உமது சப்தத்தை கொஞ்சம் தாழ்த்துங்கள் என்று கூறினார்கள்.
அபூதாவுத் (1133)

மார்க்கத்திற்கே முன்னுரிமை தந்தவர்

மார்க்கத்தின் அருமையைப் புரியாதவர்கள் மார்க்கத்தை விடவும் மற்றவைகளில் தான் அதிக கவனம் செலுத்துகின்றார்கள். ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைப் பெரும் பொக்கிஷமாக எண்ணி பல தியாகங்களைச் செய்து ஏற்றுக் கொண்டதால் இதன் அருமையை உணர்ந்து மற்ற அனைத்தையும் விட மார்க்கத்திற்கே முன்னுரிமை கொடுத்தார்கள்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுவதாவது
நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆவுடைய நாளில் நின்று (உரையாற்றிக்) கொண்டிருந்த போது ஒரு ஒட்டகக் கூட்டம் (வியாபாரப் பொருட்களுடன்) வந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் அனைவரும் அதை நோக்கிச் சென்று விட்டார்கள். இறுதியாக அவர்களுடன் 12 நபர்களைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. (நபி (ஸல்) அவர்களுடன் இருந்த) அவர்களில் அபூபக்ரும் உமரும் அடங்குவர். (முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்றுவிடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும் வியாபாரத்தையும் விட சிறந்தது. அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன் என கூறுவீராக என்ற வசனம் (62 : 11) இறங்கியது.
நூல் : முஸ்லிம் (1568)
வணக்க வழிபாடுகளை வீட்டிற்குள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இப்னு தகினா அடைக்கலம் கொடுத்தார். ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் சிறிது காலத்திற்குப் பிறகு பகிரங்கமாகச் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது
உடனே இப்னு தகினா அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து எந்த அடிப்படையில் நான் உனக்கு அடைக்கலம் தந்தேன் என்பதை நீர் அறிவீர். நீ அதன்படி நடக்க வேண்டும். இல்லையென்றால் எனது அடைக்கலத்தை என்னிடமே திருப்பித் தந்து விட வேண்டும். இப்னு தகினா செய்த உடன்படிக்கையை அவரே மீறி விட்டார் என்று பிற்காலத்தில் அரபியர் பேசக் கூடாது என்று நான் விரும்புகிறேன் எனக் கூறினார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் உமது அடைக்கல ஒப்பந்தத்தை நான் உன்னிடமே திருப்பித் தந்து விடுகிறேன். அல்லாஹ்வின் அடைக்கலத்தில் நான் திருப்தியுறுகிறேன் என்று கூறினார்கள்.
நூல் : புகாரி (2297)
வேறுபட்ட இரு மதங்களைத் தழுவியவர்கள் ஒருவருக்கொருவர் வாரிசாக முடியாது என்று இஸ்லாம் கூறுகிறது. தம் மகன் இஸ்லாத்தை ஏற்காமல் இருந்த போது இந்தச் சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தம் வாரிசாக அவரை ஆக்க மாட்டேன் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் சத்திமிட்டுக் கூறினார்கள். மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களுக்கு உறவினர்கள் அழைக்கும் போது மார்க்கத்தை உதறிவிட்டு உறவை தேர்வு செய்பவர்கள் இந்த நிகழ்விலிருந்து படிப்பினை பெறக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
உம்மு சஃத் பின்த் ரபீஃ (ரலி) அவர்கள் கூறியதாவது
நீங்கள் யார் விஷயத்தில் (வாரிசாக ஆக்க மாட்டேன் என்று) சத்தியம் செய்தீர்களோ அவர்களுக்கு அவர்கள் பங்கைக் கொடுத்து விடுங்கள். (4 : 33) இந்த வசனம் அபூபக்ர் மற்றும் அவரது மகன் அப்துர் ரஹ்மான் விஷயத்தில் தான் இறங்கியது. அப்துர் ரஹ்மான் இஸ்லாத்தை ஏற்க மறுத்த போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மானை தனது வாரிசாக நான் ஆக்க மாட்டேன் என்று சத்தியமிட்டுக் கூறினார்கள். பின்பு அவர் இஸ்லாத்தைத் தழுவிய போது அவருக்குரிய பங்கை அவருக்குக் கொடுக்குமாறு அல்லாஹ் தன் நபிக்குக் கட்டளையிட்டான்.
நூல் : அபூதாவுத் (2534)

நன்மையில் முந்திக்கொள்பவர்

அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை உறுதியாக நம்பியதினால் மார்க்க விஷயங்களில் போட்டி போட்டுக்கொண்டு எல்லோரையும் விட முன்னால் நின்றார்கள்.
அபூஹ‚ரைரா (ரலி) அவர்கள் கூறுவதாவது
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்? என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். இன்றைய தினம் ஜனாஸாவை (பிரேதத்தை) உங்களில் பின்தொடர்ந்தவர் யார்? என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். இன்றைய தினம் ஒரு ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்? என்று அவர்கள் கேட்க அபூபக்ர் (ரலி) நான் என்றார்கள். இன்றைய தினம் ஒரு நோயாளியை நலம் விசாரித்தவர் உங்களில் யார்? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க அதற்கும் அபூபக்ர் (ரலி) நான் என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை என்றார்கள்.
நூல் : முஸ்லிம் (1865)
நன்மையான காரியங்களில் முந்திக் கொள்வதில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் மத்தியில் கடுமையான போட்டிகள் ஏற்பட்டிருக்கிறது.
உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது
பள்ளியில் ஒரு மனிதர் நின்று தொழுது கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரது ஓதுதலை நின்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவரை (யார் என்று) நாங்கள் அறிந்து கொள்வதற்கு முற்படும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆன் இறக்கப்பட்டவாறு இனிமையாக ஓதுவது யாருக்கு விருப்பமானதாக இருக்கிறதோ அவர் இப்னு உம்மி அப்து (அதாவது இப்னு மஸ்ஊத்) அவர்கள் ஓதுவது போல் ஓதட்டும் என்று கூறினார்கள். பிறகு (தொழுது கொண்டிருந்த) அந்த மனிதர் உட்கார்ந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். நபி (ஸல்) அவர்கள் (அதிகமாகக்) கேள் உமக்கு வழங்கப்படும். (அதிகமாகக்) கேள் உமக்கு வழங்கப்படும் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக இப்னு மஸ்ஊதிடத்தில் காலையில் சென்று அவருக்கு நற்செய்தி கூறுவேன் என்று நான் கூறிக் கொண்டேன். அவருக்கு நற்செய்தி கூறுவதற்காக காலையில் அவரிடத்தில் சென்றேன். ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு முன்னால் அவரிடத்தில் சென்று நற்செய்தி கூறிவிட்டதைக் கண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக நான் எந்த ஒரு நன்மையின் பால் முந்தினாலும் எனக்கு முன்னால் அபூபக்ர் அதன் பால் என்னை முந்தாமல் இருந்ததில்லை.
நூல் ; அஹ்மத் (170)
அபூபக்ர் (ரலி) அவர்கள் சத்தியம் செய்தால் அதை எளிதில் முறித்துவிட மாட்டார்கள். ஆனால் சத்தியம் செய்த விஷயத்தை விட வேறொரு நல்ல காரியத்தைக் கண்டால் தம் சத்தியத்தை முறித்துவிட்டு நல்லதின் பக்கமே விரையக்கூடியவர்களாக இருந்தார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
என் தந்தை (அபூபக்ர் (ரலி) அவர்கள்) சத்தியத்தை முறித்ததற்கான பரிகார(ம் தொடர்பான வசன)த்தை அல்லாஹ் அருளும் வரை எந்தச் சத்தியத்தையும் முறிக்காமலிருந்து வந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் ஒரு சத்தியத்தைச் செய்து (அதன்பின் அதைக் கைவிட்டு) மற்ற (ஒன்றைத் தேர்ந்தெடுப்ப)தே அதைவிடச் சிறந்தது என்று நான் கருதினால் (அதைக் கைவிட்டு) அல்லாஹ் அளித்த சலுகையை ஏற்றுக் கொண்டு எது சிறந்ததோ அதையே செய்வேன் என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி (4614)

கொடைவள்ளல்

இறைவன் அளித்த செல்வத்தை அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்திற்காக அள்ளிக் கொடுத்தார்கள். அவர்களின் செல்வம் தான் ஆரம்ப நேரத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. இதை நபி (ஸல்) அவர்கள் ஒரு நேரத்தில் சுட்டிக்காட்டி அபூபக்ர் (ரலி) அவர்களின் தியாகத்தை மக்களுக்கு உணர்த்தினார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுவதாவது
அபூபக்ரின் செல்வம் எனக்கு பலனளித்ததைப் போல் வேறு எவருடைய செல்வமும் பலனளிக்கவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அழுது விட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே நானும் எனது செல்வமும் உங்களுக்குத் தான் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல் : இப்னு மாஜா (91)
நபி (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்த போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த 5 ஆயிரம் அல்லது 6 ஆயிரம் திர்ஹம் முழுவதையும் எடுத்துச் சென்றார்கள். தமது குடும்பத்திற்காக அவர்கள் எதையும் விட்டுச் செல்லவில்லை.
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் பயணம்) சென்ற போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த அனைத்துப் பொருளையும் எடுத்துக் கொண்டு நபியவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது அவர்களிடம் 5 அல்லது 6 ஆயிரம் திர்ஹங்கள் இருந்தன. அப்போது எனது பாட்டனார் (அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹாஃபா என்னிடத்தில் வந்தார். அவர் பார்க்கும் திறன் அற்றவராக இருந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக தம் உயிராலும் செல்வத்தாலும் (தியாகம் செய்து) அபூபக்ர் உங்களை தவிக்க விட்டு விட்டார் என்று தான் நான் கருதுகிறேன் என்று அபூகுஹாஃபா கூறினார். நான் இல்லை பாட்டனாரே அவர் நமக்கு ஏராளமான நன்மைகளை விட்டுச் சென்றிருக்கிறார் என்று கூறிவிட்டு சில கற்களை எடுத்தேன். எனது தந்தை (அபூபக்ர்) எந்த பொந்தில் தம் செல்வத்தை வைப்பார்களோ அந்த இடத்தில் அக்கற்களை வைத்துவிட்டு அதன் மேல் ஒரு துணியை போட்டு (மறைத்து) விட்டேன். பின்பு அபூகுஹாஃபாவின் கையை பிடித்து பாட்டனாரே இந்தப் பொருளில் கை வைத்துப் பாருங்கள். (என் தந்தை பொருளை விட்டுச் சென்றுள்ளார்) என்று கூறினேன். அவர் கையை அதன் மேல் வைத்து விட்டு பராவாயில்லையே. உங்களுக்கு அவர் செல்வத்தை விட்டுச் சென்றிருந்தால் நல்ல விதமாக நடந்து கொண்டார். உங்கள் தேவைகளை இதன் மூலம் நீங்கள் அடைந்து கொள்ளலாம் என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக அபூபக்ர் (ரலி) அவர்கள் எதையும் விட்டுச் செல்லவில்லை. மாறாக இந்த வயதானவரை இவ்வாறு கூறி அமைதிப்படுத்த நான் நாடினேன்.
நூல் : அஹ்மத் (25719)
ஏழைஎளியோர், திக்கற்றவர்கள், உறவினர்கள் ஆகியோருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் உதவி வந்தார்கள். அறியாமைக் காலத்திலேயே இத்தனை நற்காரியங்கள் செய்தார்கள் என்றால் எத்தகைய விசாலமான மனதை அவர்கள் பெற்றிருப்பார்கள். இஸ்லாத்தில் நுழைந்த பிறகும் கூட நற்பணிகளுக்கு எள்ளளவும் கொடுக்காத கஞ்சர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களின் வாழ்க்கையில் சிறந்த பாடத்தைப் பெற வேண்டும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
இப்னு தகினா அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களிடம்) உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது. வெளியேற்றப்படவும் கூடாது. ஏனெனில் நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர். உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர். பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர். விருந்தினர்களை உபசரிக்கிறீர். துன்பமுற்றவர்களுக்கு உதவுகிறீர் என்று கூறினார்.
நூல் : புகாரி (2297)

திக்கற்றோருக்கு விருந்தளித்தவர்

நபி (ஸல்) அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக அபூதர் (ரலி) அவர்கள் மக்காவிற்கு வந்த போது இணைவைப்பாளர்கள் அவரைத் தாக்கிக் கொடுமைப்படுத்தினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களுக்கு உணவளிப்பதற்காக தம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். சிரமப்படுவோரைத் தம் இல்லத்திற்கு அழைத்து வந்து விருந்தோம்பும் உயரிய பண்பும் அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் இருந்தது.
அபூதர் (ரலி) அவர்கள் கூறுவதாவது
ஓடுகள் எலும்புகள் அனைத்தையும் எடுத்து வந்து மக்கள் என்னைத் தாக்கினார்கள். நான் மயக்கமுற்று விழுந்தேன். பிறகு நானாக மயக்கம் தெளிந்து எழுந்த போது சிவப்பு நிற சிலையைப் போன்று இருந்தேன். பிறகு நான் ஸம்ஸம் கிணற்றுக்கு வந்து என் உடலில் படிந்திருந்த இரத்தத்தைக் கழுவினேன். ஸம்ஸம் தண்ணீரை அருந்தினேன். இவ்வாறு நான் அங்கு முப்பது நாட்கள் தங்கியிருந்தேன்.....அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே இன்றிரவு இவருக்கு உணவளிக்க எனக்கு அனுமதி அளியுங்கள் என்று கேட்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் கதவைத் திறந்து எங்களுக்காக தாயிஃப் நகர உலர்ந்த திராட்சையை அள்ளித் தரலானார்கள். அதுவே நான் மக்காவில் உண்ட முதல் உணவாகும்.
நூல் : முஸ்லிம் (4878)
வீட்டிற்கு வந்த விருந்தாளியின் மனம் வேதனைப்படுமாறு பேசி விரட்டுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள். அப்படியே விருந்தளித்தாலும் செல்வந்தர்கள், வேண்டியவர்கள் தனக்கு உதவியவர்களுக்குத் தான் விருந்தளிக்கிறார்கள். ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் பட்டினியால் வாடியவர்களுக்கு மனமுவந்து விருந்தளித்தார்கள். வந்தவரை வலியுறுத்தி சாப்பிட வைக்காததால் தம் குடும்பத்தாரையும் திட்டுகிறார்கள். இதன் காரணத்தால் அல்லாஹ் அவர்களுடைய உணவில் அள்ள அள்ள குறையாமல் இருக்கும் வண்ணம் பரகத்தைக் கொடுத்தான்.
அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது
திண்ணைத் தோழர்கள் ஏழ்மை வயப்பட்ட மனிதர்களாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் இருவருக்குரிய உணவு யாரிடத்தில் உள்ளதோ அவர் மூன்றாமவரை அழைத்துச் செல்லட்டும். நான்கு பேருக்குரிய உணவு இருந்தால் ஜந்தாவது ஆறாவது நபர்களாக திண்ணைத் தோழர்களை அழைத்துச் செல்லட்டும் எனக் கூறினார்கள். அபூபக்ர் மூன்று நபர்களை அழைத்துச் சென்றார். அபூபக்ர் (ரலி) நபி (ஸல்) அவர்களுடன் இரவு உணவு அருந்திவிட்டு இஷாத் தொழும் வரை அங்கேயே தங்கிவிட்டு இரவில் அல்லாஹ் நாடிய அளவு கழிந்த பின் (வீட்டிற்கு) வந்தார்கள். உங்கள் விருந்தினரை விட்டு விட்டு எங்கே தங்கி விட்டீர் என்று அவர்களது மனைவி கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) இன்னும் நீ அவர்களுக்கு இரவு உணவு அளிக்கவில்லையா? என்று திருப்பிக் கேட்டார்கள். உணவை வைத்த பின்பும் நீங்கள் வரும் வரை அவர்கள் உண்ண மறுத்து விட்டனர் என்று மனைவி கூறினார். (என் தந்தை கோபிப்பார் என்று அறிந்த) நான் சென்று ஒளிந்து கொண்டேன்.
அறிவிலியே. மூக்கறுபடுவாய் என்று ஏசினார்கள். பிறகு மகிழ்வற்ற நிலையில் சாப்பிடுங்கள். அல்லாஹ்வின் மேல் ஆணையாக ஒரு போதும் நான் சாப்பிட மாட்டேன் என்று (தம் குடும்பத்தாரை நோக்கிக்) கூறினார்கள். நாங்கள் உணவின் ஒவ்வொரு கவளத்தையும் எடுத்துச் சாப்பிடும் போது அதன் அடிப்புறத்திலிருந்து அதை விட அதிகமாக வளர்ந்து கொண்டே இருந்தது. முன்பிருந்த அளவு அல்லது அதை விடவும் அதிகமான உணவைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் பனூஃபிராஸ் சகோதரியே இது என்ன? என்று (தம் மனைவியிடம்) கேட்டார்.
அதற்கவர் என் கண்குளிர்ச்சியின் மேல் ஆணை இதன் காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் முன்பிருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாக உணவு உள்ளது என்றார். பிறகு அபூபக்ரும் சாப்பிட்டார்கள். சாப்பிட மாட்டேன் என்று சத்தியம் செய்தது ஷைத்தானிடமிருந்து ஏற்பட்டுவிட்டது என்று கூறிவிட்டு ஒரு கவளத்தை எடுத்து உண்டார்கள். பின்பு நபி (ஸல்) அவர்களிடம் எஞ்சிய உணவை எடுத்துச் சென்றார்கள். காலை வரை அது அங்கேயே இருந்தது.
நூல் : புகாரி (602)

இரக்க குணமுள்ளவர்

இயற்கையாகவே அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் மென்மையான போக்கும் இரக்கத்தன்மையும் ஆழப்பதிந்திருந்தது. அதனால் தான் கொடுமை செய்யப்பட்ட பிலால் (ரலி) அவர்களை விலைக்கு வாங்கி விடுதலை செய்தார்கள். ஏழை எளியோர்களுக்குப் பொருளுதவியும் செய்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் இரக்க குணத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறுவதைக் கவனியுங்கள்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுவதாவது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் சமுதாயத்தில் என் சமுதாயத்தின் மீது அதிக இரக்கமுள்ளவர் அபூபக்ர் ஆவார். அல்லாஹ்வுடைய விஷயத்தில் அவர்களில் கடுமையானவர் உமராவார்.
நூல் : திர்மிதி (3724)
தம்மை அழிக்க நினைப்பவர்களாக இருந்தாலும் அவர்கள் மீதும் இரக்கப்பட்டு மன்னித்து விடும் உயரிய மனப்பான்மையை அபூபக்ர் (ரலி) அவர்கள் பெற்றிருந்தார்கள்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுவதாவது
பத்ருப் போர் (முடிந்த போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த அடிமைகள் விஷயத்தில் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? என்று (மக்களிடம்) கேட்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அல்லாஹ்வின் தூதரே (இவர்கள்) உங்கள் கூட்டத்தினர்; மற்றும் உங்கள் குடும்பத்தினர். இவர்களை விட்டுவைத்து (திருந்துவதற்கு) அவகாசம் அளியுங்கள் என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே இவர்கள் உங்களை (ஊரை விட்டும்) வெளியேற்றி உங்களைப் பொய்யர் என்று கூறினார்கள். எனவே தாமதப்படுத்தாமல் அவர்கள் பிடரிகளை வெட்டி விடுங்கள் என்று கூறினார். அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே அதிகமான விறகுகளைக் கொண்ட பள்ளத்தாக்கைக் கவனித்து அதிலே அவர்களைச் செலுத்தி அவர்கள் மீது நெருப்பை மூட்டி விடுங்கள் என்று கூறினார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் (அப்துல்லாஹ் பின் ரவாஹாவைப் பார்த்து) உமது உறவை நீ முறித்து விட்டாய் என்று சொன்னார்கள். சிலர் அபூபக்ர் (ரலி) அவர்களின் கூற்றையும் சிலர் உமர் (ரலி) அவர்களின் கூற்றையும் சிலர் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களின் கூற்றையும் தூக்கிப் பிடித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவர்களுக்கு எந்தப் பதிலும் தராமல் மக்களிடத்தில் வந்து இந்த விஷயத்தில் சிலரது உள்ளங்களை பாலை விட அல்லாஹ் மென்மையாக்கி விடுகிறான். சிலரது உள்ளங்களை கல்லை விடவும் கடினமாக்கி விடுகிறான் என்று கூறி விட்டு (பின் வருமாறு) சொன்னார்கள். அபூபக்ரே நீர் இப்ராஹிமைப் போன்றவராவீர். யார் என்னைப் பின்பற்றினாரோ அவர் என்னைச் சார்ந்தவர். எனக்கு யாராவது மாறுசெய்தால் (இறைவா) நீயே (அவரை) மன்னிப்பவனாகவும் கருணையுள்ளவனாகவும் இருக்கிறாய் என்று இப்ராஹிம் கூறினார். இன்னும் அபூபக்ரே நீர் ஈஸாவைப் போன்றவராவீர். ஈஸா கூறினார். (இறைவா) அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்கள். அவர்களை நீ மன்னித்தால் நீயே மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறாய்.
நூல் : அஹ்மத் (3452)
அனைத்து மக்களும் நரகத்திற்குச் சென்று விடாமல் சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற ஆசை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் இருந்தது. என் சமுதாயத்தின் மீது அபூபக்ர் தான் அதிக இரக்கம் உள்ளவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை அபூபக்ர் (ரலி) அவர்கள் நிரூபித்தும் காட்டினார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது
எனது சமுதாயத்தில் 4 லட்சம் பேரை சொர்க்கத்தில் நுழைவிப்பதாக அல்லாஹ் எனக்கு வாக்களித்தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே எங்களை (இன்னும்) அதிகப்படுத்துங்கள் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தம் கைகளை இணைத்து இவ்வளவு (பேரை அல்லாஹ் அதிகப்படுத்துவான்) என்று சொன்னார்கள். அப்போதும் அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே எங்களை அதிகப்படுத்துங்கள் என்று கூறினார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் தம் கைகளை இணைத்து இவ்வாறு (அல்லாஹ் மக்களை சுவர்க்கத்தில் அள்ளிப் போடுவான்) என்றார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் அபூபக்ரே போதும் (நிறுத்துங்கள்) என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் உமரே என்னை விட்டு விடுங்கள். எங்கள் அனைவரையும் அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்வதினால் உமக்கு ஒன்றுமில்லை என்று கூறினார்கள். அல்லாஹ் நாடினால் தன் (அனைத்து) படைப்பினங்களையும் ஒரே கையில் (எடுத்து) சொர்க்கத்தில் நுழையச் செய்து விடுவான் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். உமர் சரியாகச் சொன்னார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அஹ்மத் (12234)

குர்ஆனைக் கேட்டு இளகிய உள்ளம்

அரபு தேசத்திற்கே தலைமை தாங்கும் அளவிற்கு திறமையும், ஆற்றலும் அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் இருந்த போதும் திருக்குர்ஆனிற்கு முன்னால் அவர்கள் நடுநடுங்கினார்கள். இவர்களின் அழுகை மக்கத்து காஃபிர்களின் குடும்பங்களை நிலைகுலையச் செய்தது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
ஒரு பள்ளி கட்ட வேண்டும் என்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்குத் தோன்றிய போது தமது வீட்டின் வெளிப்புறத்தில் பள்ளி ஒன்றைக் கட்டினார்கள். அதில் தொழுது கொண்டும் குர்ஆன் ஓதிக் கொண்டும் இருப்பார்கள். இணை வைப்பவர்களின் பெண்களும், குழந்தைகளும் அவர்களை வியப்புடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அபூபக்ர் மிகுதியாக அழுபவராக இருந்தார். குர்ஆனை ஓதும் போது அவரால் தமது கண்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாது. இணை வைக்கும் குறைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
நூல் : புகாரி (476)
நபி (ஸல்) அவர்கள் மரண வேளையில் இருந்த போது அபூபக்ர் (ரலி) அவர்களைத் தொழவைக்குமாறு கட்டளையிட்டார்கள். குர்ஆன் ஓதும் போது அபூபக்ர் கடுமையாக அழத் தொடங்கிவிடுவார்கள் என்பதால் ஆயிஷா (ரலி) அவர்கள் வேறு யாராவது ஒருவரை நியமிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.
அப்துல்லாஹ் (ரலி) கூறியதாவது
நபி (ஸல்) அவர்களுக்கு வேதனை அதிகமான போது தொழுகையைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டது. அபூபக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அபூபக்ர் இளகிய உள்ளம் படைத்தவர். அவர் (குர்ஆனை) ஓதினால் அழுகை அவரை மிகைத்துவிடும் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் தமது பதிலையே திரும்பச் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அபூபக்ரை தொழவைக்கச் சொல்லுங்கள். நீங்கள் யூசுப் நபியின் தோழிகளாக இருக்கிறீர்கள் என்றார்கள்.
நூல் : புகாரி (682)

வீரம்

பொதுவாக மெல்லிய உடலும் மென்மையான உள்ளமும் கொண்டவர்களிடத்தில் வீரத்தை பெருமளவு எதிர்பார்க்க இயலாது. முரட்டுத் தன்மை கொண்டவர்களிடத்தில் மாத்திரம் தான் இன்று வீரத்தைப் பார்க்க முடிகிறது. ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் எந்த அளவுக்கு மென்மையானவராகத் திகழ்ந்தார்களோ அந்த அளவுக்கு வீரமுள்ள ஆண்மகனாகவும் காட்சியளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களைக் கொல்ல வேண்டும் என்ற வெறியுடன் மக்கத்துக் காஃபிர்கள் சுற்றித் திரிந்து கொண்டும் பெருமானாரை தேடிக் கொண்டுமிருந்த நேரத்தில் எள் முனையளவு கூட அஞ்சாமல் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து மதீனாவிற்குச் செல்வதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தயாரானார்கள்.
(மதீனாவிற்குப்) புறப்பட எனக்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டது உமக்குத் தெரியுமா? என்று நபி (ஸல்) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களிடம்) கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே (தாங்கள் புறப்படும் ஹிஜ்ரத்தின் போது) நானும் தங்களுடன் வர விரும்புகிறேன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் நீங்கள் என்னுடன் வருவதை நானும் விரும்புகிறேன் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே நான் பயணத்திற்காக தயார்படுத்தி வைத்திருக்கும் இரண்டு ஒட்டகங்கள் என்னிடம் உள்ளன. அவற்றில் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை நான் விலைக்கு வாங்கிக் கொள்கிறேன் என்றார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (2138)
உஹ‚துப் போரில் கலந்து கொண்டு எதிரிகளால் காயமுற்ற அபூபக்ர் (ரலி அவர்கள் கொஞ்சம் கூட அஞ்சாமல் மீண்டும் மறுநாள் எதிரிகளிடத்தில் போர் தொடுப்பதற்குத் தயாரானார்கள்.
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது
தமக்கு(ப் போரில்) படுகாயங்கள் ஏற்பட்ட பின்னரும் கூட அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் அழைப்பை அவர்கள் ஏற்றார்கள். நன்மை புரிந்து தீமையிலிருந்து தம்மைக் காத்துக்கொண்ட இத்தகையோருக்கு மகத்தான பிரதிபலன் உண்டு என்னும் (3 : 172) வது வசனத்தை ஆயிஷா (ரலி) அவர்கள் ஓதிவிட்டு என்னிடம் என் சகோதரி மகனே உன் தந்தை ஸுபைர் (ரலி) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (அந்த அழைப்பை ஏற்ற) அவர்களில் உள்ளவர்கள் தாம். உஹுத் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்ட போது இணை வைப்பவர்கள் திரும்பிச் சென்று விட்டனர். அவர்கள் மீண்டும் திரும்பி வந்து விடுவார்களோ என்று நபி (ஸல்) அவர்கள் அஞ்சினார்கள். (அப்போது) அவர்களுக்குப் பின்னால் (அவர்களை அச்சுறுத்துவதற்காக அவர்களைத் துரத்திச்) செல்பவர்கள் யார்? என்று கேட்டார்கள். (உஹுதில் கலந்து கொண்ட) நபித்தோழர்களில் எழுபது பேர் (அவர்களைத் துரத்தியடிக்க) முன் வந்தனர் என்று கூறினார்கள். அவர்களில் அபூபக்ர் (ரலி) அவர்களும் ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களும் இருந்தனர்.
நூல் : புகாரி (4077)
அபூபக்ர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் ஒரு போருக்குத் தளபதியாக நியமித்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் மாவீரராகத் திகழ்ந்ததால் இப்பொறுப்பை ஏற்று அப்போரில் எதிரிகளைக் கண்டு ஓடாமல் அவர்களை வீழ்த்தினார்கள்.
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது
நாங்கள் பஸாரா குலத்தார் மீது போரிடப் புறப்பட்டோம். எங்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தளபதியாக இருந்தார்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எங்களுக்குத் தளபதியாக நியமித்தார்கள். எங்களுக்கும் நீர்நிலைக்குமிடையே ஒரு மணி நேரப் பயணத் தொலைவு இருந்த போது இரவின் இறுதி நேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களை ஓய்வெடுக்கச் சொன்னார்கள். பின்னர் பல்வேறு திசைகளிலிருந்து அதிரடித் தாக்குதல் தொடுத்தோம். அப்போது (ஹவாஸின் குலத்தாரின்) நீர்நிலைக்கு வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் அங்கு சிலரை வெட்டி வீழ்த்தினார்கள். வேறு சிலரைச் சிறைப்பிடித்தார்கள்.
நூல் : முஸ்லிம் (3609)

தீமைகளை வெறுப்பவர்

அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் முன்னால் ஒரு தீமை நடப்பதைக் காணும் போது அதை வெறுப்பவர்களாகவும், தடுத்து நிறுத்துபவர்களாகவும் இருந்தார்கள். இதைப் பின்வரும் சம்பவத்தில் தெளிவாக உணரலாம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
புஆஸ் (எனும் போர்) பற்றிய பாடல்களை இரண்டு சிறுமியர்கள் என்னிடம் பாடிக் காட்டிக் கொண்டிருந்த போது என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தமது முகத்தை (வேறு புறமாகத்) திருப்பிக் கொண்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து நபி (ஸல்) அவர்களின் அருகில் ஷைத்தானின் இசைக் கருவிகளா? என்று கூறி என்னைக் கடிந்து கொண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரை நோக்கி அவ்விருவரையும் விட்டுவிடுங்கள் என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் கவனம் வேறு புறம் திரும்பிய போது அவ்விரு சிறுமிகளையும் விரல்களால் குத்தி (வெளியேறி விடுமாறு கூறி)னேன். அவ்விருவரும் வெளியேறி விட்டனர்.
நூல் : புகாரி (949)
இன்ன பிற கடமைகளைப் புறந்தள்ளிவிட்டு வணக்க வழிபாடுகளில் அளவுகடந்து செல்வதை மார்க்கம் தடை செய்திருக்கிறது. எல்லை கடந்து செயல்படுவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடந்து கொண்டதைப் போல் அபூபக்ர் (ரலி) அவர்களும் கடுமையாக நடந்து கொண்டார்கள்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது
எவனைத் தவிர வேறு எந்த வணக்கத்திற்குரியவனும் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீதாணையாக மார்க்க விஷயங்களில் எல்லை கடந்து செல்பவர்களிடத்தில் கடுமையாக நடந்து கொள்பவராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட வேறு யாரையும் நான் பார்த்ததில்லை. அவர்கள் விஷயத்தில் கடுமை காட்டுபவராக அபூபக்ர் (ரலி) அவர்களை விட வேறு யாரையும் நான் பார்த்ததில்லை. இவர்கள் விஷயத்தில் அதிகம் அஞ்சுபவராக உமர் (ரலி) அவர்களை நான் பார்த்தேன்.
நூல் : தாரமீ (138)

அல்லாஹ்விற்காக சிரமங்களை பொறுத்துக் கொண்டவர்

செல்வச் சீமானாய் சொகுசாக வாழ்ந்து வந்த இறை நேசர் அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்கு ஏற்பட்ட துன்பங்களையெல்லாம் சகித்துக் கொண்டு கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார். மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குச் சென்ற போது மதீனாவின் தட்பவெப்பம் ஒத்துக் கொள்ளாத காரணத்தினால் அபூபக்ர் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். துன்பமான இந்நேரத்தில் தமது கடந்த கால சொகுசு வாழ்க்கையை எண்ணிப் பார்க்காமல் மரணத்தை நினைவு கூர்ந்தார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது அபூபக்ர் (ரலி) பிலால் (ரலி) ஆகியோருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்குக் காய்ச்சல் ஏற்படும் போது மரணம் தனது செருப்பு வாரை விடச் சமீபத்தில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருடன் காலைப் பொழுதை அடைகிறான் என்ற கவிதையைக் கூறுவார்கள்.
நூல் : புகாரி (1889)
தபூக் போர்க்களத்தின் போது உண்ணுவதற்கு உணவில்லாமலும் பருகுவதற்கு நீரில்லாமலும் நபித்தோழர்கள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள். இந்நேரத்தை சிரமமான நேரம் (சாஅதுல் உஸ்ரா) என்று அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான். அல்லாஹ்விற்காக இச்சுமையை ஏற்றுக் கொண்டு பொறுமைக் கடலாக அபூபக்ர் (ரலி) அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது
சிரமமான கால கட்டத்தைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள் என்று உமர் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு உமர் (ரலி) அவர்கள் கடுமையான வெப்பத்தில் தபூக்கை நோக்கி நாங்கள் சென்றோம். (ஏதோ) ஒரு இடத்தை நாங்கள் அடைந்த போது எங்களுடைய வாகனங்கள் (ஒட்டகங்கள் தண்ணீரின்றி) அழிந்து விடுமோ என்று நினைக்கும் அளவிற்கு எங்களுக்குத் தாகம் ஏற்பட்டது. முடிவில் ஒரு மனிதர் தன் ஒட்டகத்தை அறுத்து அதன் நீர்ப்பையைப் பிழிந்து குடிக்க ஆரம்பித்து விட்டார். மீதி நீரை அதன் வயிற்றிலேயே விட்டு விட்டார். அப்போது அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில்) அல்லாஹ்வின் தூதரே பெரும்பாலும் உங்கள் பிரார்த்தனையில் அல்லாஹ் நல்லதை ஏற்படுத்துகிறான். எனவே எங்களுக்காகப் பிரார்த்தனை புரியுங்கள் என்று கூறினார்கள். இதைத் தாங்கள் விரும்புகிறீர்களா? என்று நபி (ஸல்) அவர்கள் வினவியதற்கு ஆம் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் பதலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இரு கைகளையும் உயர்த்தி (பிரார்த்தனை செய்தார்கள்). மேகம் திரண்டு மழையை கொட்டிய பிறகே கைகளைத் தளர்த்தினார்கள். தங்களிடமிருந்தவற்றில் மக்கள் நீரை நிரப்பிக் கொண்டார்கள். பின்பு அம்மேகத்தைக் காணுவதற்காக நாங்கள் சென்றோம். அது (எங்கள்) படையை விட்டும் கடந்து சென்று விட்டது.
நூல் : சஹீஹு இப்னி ஹிப்பான் பாகம் : 4 பக்கம் : 223
ஏழை எளியவர்களின் பசியைப் போக்கி வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக தம் செல்வங்களையெல்லாம் இழந்து பசிக் கொடுமைக்கு ஆளானார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு இரவிலோ, அல்லது பகலிலோ (வீட்டை விட்டு) வெளியே வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களையும், உமர் (ரலி) அவர்களையும் (வெளியே) கண்டார்கள். இந்நேரத்தில் உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியே கொண்டு வந்தது எது? என்று நபி (ஸல்) அவர்கள் (அவர்கள் இருவரிடத்திலும்) கேட்டார்கள். அதற்கு அவர்கள் பசி தான் அல்லாஹ்வின் தூதரே என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக உங்களை வெளியேற்றியது தான் என்னையும் வெளியேற்றியது என்று கூறினார்கள். (பிறகு மூவரும் ஒரு அன்சாரித் தோழரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தினார்கள்)
நூல் : முஸ்லிம் (4143)

பணிவால் உயர்ந்தவர்

அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்திற்காக எண்ணற்ற தியாகங்களைச் செய்தார்கள். என்றாலும் எந்த ஒரு நேரத்திலும் தம் புகழையும், தியாகத்தையும் தாமே வெளிப்படுத்திக் கூறும் பண்பு அவர்களிடத்தில் தோன்றியதில்லை. மாறாக பணிவையும் அடக்கத்தையும் தான் அவர்கள் வாழ்வில் காண முடிகிறது. இறைப் பணிக்காக ஏதாவது நல்லது செய்தால் அதைச் சுட்டிக்காட்டி பதவியை அடைவதற்கு முனைபவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் இருந்த இப்பண்பைக் கட்டாயம் பெற வேண்டும்.
அபூஹ‚ரைரா (ரலி) அவர்கள் கூறுவதாவது
அபூபக்ரின் பொருளைம் தவிர (வேறு எவரின்) பொருளும் எனக்குப் பயன்படவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அழுது கொண்டே உங்களின் மூலமாக அல்லாஹ் எனக்குத் தான் பலனைத் தந்தான். உங்களின் மூலமாக அல்லாஹ் எனக்குத் தான் பலனைத் தந்தான். உங்களின் மூலமாக அல்லாஹ் எனக்குத் தான் பலனைத் தந்தான் என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மத் (8435)
ஒருவன் உயர்ந்த அந்தஸ்த்தைப் பெற்று விட்டால் அவனுடைய நடை உடை பாவனையில் பெருமை அகம்பாவம் கலந்து விடுகிறது. தன் உயர்வுக்குக் காரணமானவர்களிடத்திலேயே ஆணவத்துடன் நடந்து கொள்வான். நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு மக்களுக்குத் தொழ வைக்கும் உயரிய அந்தஸ்து கொடுக்கப்பட்டது. என்றாலும் அவர்களிடத்தில் பணிவு அதிகரித்ததே தவிர அகம்பாவம் தலை தூக்கவில்லை.
ஸஹ்ல் பின் ஸஃது (ரலி) அவர்கள் கூறியதாவது
அம்ர் பின் அவ்ப் கூட்டத்தாரிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நபி (ஸல்) அவர்கள் சென்றிருந்த போது அங்கு தொழுகையின் நேரம் வந்து விட்டது. அப்போது பாங்கு சொல்பவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து நான் இகாமத் சொல்லட்டுமா? நீங்கள் தொழுகை நடத்துகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆம் என்று கூறிவிட்டு தொழுகை நடத்த ஆரம்பித்தார்கள். மக்கள் தொழுது கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் வந்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் வரிசைகளை விலக்கிக் கொண்டு முன் வரிசையில் வந்து நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் (இமாமுக்கு நினைவூட்டுவதற்காக) கை தட்டினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகையில் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். மக்கள் அதிகமாகக் கை தட்டிய போது திரும்பிப் பார்த்தார்கள். அங்கே நபி (ஸல்) அவர்களைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பார்த்து உங்களுடைய இடத்திலேயே நில்லுங்கள் என்று சைகை செய்தார்கள். தமக்கு நபி (ஸல்) அவர்கள் இந்த அனுமதியை வழங்கியதற்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது கைகளை உயர்த்தி அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினார்கள். பின்னர் அபூபக்ர் பின்வாங்கி முன் வரிசையில் நின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்னே சென்று தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் அபூபக்ரே நான் உங்களுக்குக் கட்டளையிட்ட பிறகும் நீங்கள் ஏன் உங்கள் இடத்தில் நிற்காமல் பின்வாங்கி விட்டீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அபூகுஹாபாவின் மகனான அபூபக்ர் அல்லாஹ்வின் தூதர் முன் நின்று தொழுகை நடத்துவது சரியில்லை என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி (684)
பெருமையடிப்பவரில்லை என்று நபி (ஸல்) அவர்களே சான்று தரும் விதத்தில் பணிவுடன் வாழ்ந்து காட்டியவர் அபூபக்ர் (ரலி) அவர்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறிதாவது
எவன் தன் ஆடையை தற்பெருமையின் காரணத்தினால் (பூமியில் படும்படி கீழே தொங்கவிட்டு) இழுத்துக் கொண்டு செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் ஏறிட்டும் பார்க் மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் கவனமாக இல்லாவிட்டால் எனது ஆடையின் ஒரு பக்கம் கீழே தொங்கி விடுகின்றது என்று சொன்னார்கள். அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதை பெருமை பாராட்டுவதற்காகச் செய்வதில்லையே என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி (3665)
நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு தம்மை முன்னிறுத்திக் கொள்ளாமல் அடுத்த ஆட்சியாளராக உமர் (ரலி) அவர்களைத் தேர்வு செய்யுமாறு அடக்கத்துடன் அபூபக்ர் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். அந்தஸ்தையும் மரியாதையையும் தேடித் திரியாமல் தானாக வரும் போது அதில் முந்திக் கொள்ளாமல் பிறரை முற்படுத்தி பணிவுடன் அபூபக்ர் (ரலி) அவர்கள் நடந்து கொண்டார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
உமர் பின் கத்தாப் அல்லது அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ்விற்கு (தலைமைக்கான) விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் (அன்சாரிகளிடம்) சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் இல்லை. நாங்கள் உங்களிடமே விசுவாசப் பிரமாணம் செய்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர். எங்களில் சிறந்தவர். எங்களிடையே அல்லாஹ்வின் தூதருக்கு மிகவும் பிரியமாய் இருந்தவர்கள் என்று சொல்லிவிட்டு அவர்களுடைய கரத்தைப் பிடித்து அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மக்களும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள்.
நூல் : புகாரி (3667) (3667)

No comments:

Post a Comment